Pages

Saturday, May 29, 2010

தமிழர்

என்ன ஆச்சு நம் இளைய சமுதாயத்துக்கு? தமிழர்களாகிய நாம் எதில் குறைந்துவிட்டோம்? ஏன் ரிஸ்க் எடுக்கத் தயங்குகிறோம்? ஏன் சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்கி நடத்துவது நமக்கு வேப்பங்காயாக இருக்கிறது? ஏன் நமது குழந்தைகளை ஒரு என்ஜினீயராகவோ, ஒரு டாக்டராகவோ ஆக்கவேண்டும் என்று மட்டுமே நினைக்கிறோம்? ஏன் ஒரு தொழிலதிபராக ஆக்க நினைப்பதில்லை? ஆழமாக யோசித்துப் பார்த்ததில் பல விஷயங்கள் புரிந்தது.

பெரும்பாலான தமிழர்கள் அலுவலக வேலைக்குச் செல்வதை அதிகம் விரும்புகின்றனர். அதிலும் தனியார் துறை வேலை வேண்டாம், அரசாங்க வேலைதான் வேண்டும் என்கிறவர்கள் பலர். கொஞ்சநஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தொழில் தொடங்கப் போகிறார் என்றால், ஏதேதோ சொல்லி அவரைப் பயமுறுத்தி பின்வாங்கச் செய்துவிடுவது நம் இயல்பாக மாறிவிட்டது.'தமிழகத்திலிருந்து எந்தத் தொழிலதிபரும் உருவாகவில்லை. யாருமே 'ரிஸ்க்' எடுக்கத் தயாராக இல்லை' என்று நான் சொல்லவில்லை. ஆனால் சொந்தமாகத் தொழில் தொடங்கி பெரிதாகச் சாதிக்கவேண்டும் என்கிற சிந்தனை நம்மை விட்டுச் சென்று பல காலமாகிவிட்டது. நம் தாத்தாக்கள் டி.வி.எஸ்., சிம்சன் போன்ற பல மிகப் பெரிய தொழில் நிறுவனங்களை உருவாக்கினார்கள். காரணம், பெரிதாகச் சாதிக்கவேண்டும் என்கிற வெறி அவர்களிடம் இருந்தது. சிறிய அளவில்தான் அவர்கள் தொழிலைத் தொடங்கினாலும் 'Think Big'' என்கிற மந்திர வார்த்தையை மட்டும் அவர்கள் மறக்கவேயில்லை.

ஆனால் இன்று...?தொழில் செய்வது என்பது வடநாட்டினருக்கே உரித்தான ஒன்று என்றாகிவிட்டது. இன்றைய தேதியில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஒரு தொழிலதிபர் போகிறார் என்றால், அவர் வடஇந்தியாவில் பிறந்து வளர்ந்தவராகத்தான் இருக்கவேண்டும் என்று அமெரிக்கர்கள் நினைக்கிறார்கள். காரணம், அமெரிக்காவில் உள்ள மோட்டல் உரிமையாளர்கள் அனைவரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பட்டேல்கள். அந்தத் தொழிலில் மட்டுமல்ல, உலக வைர வியாபாரத்திலும் குஜராத்காரர்களே கொடிகட்டிப் பறக்கிறார்கள். வைர வியாபாரத்தில் ஆம்ஸ்டர்டேமில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றிருந்த யூதர்களையே வேலைக்கு அமர்த்தி தொழில் செய்கின்றனர் குஜராத்காரர்கள். அவ்வளவு ஏன்? நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்கூட சொந்தமாகத் தொழில் தொடங்கவேண்டும் என்பதில் வெறியோடு செயல்படுகிறார்கள். அதனால்தான் இன்று ஐ.டி. துறையில் நம்மையும் விஞ்சி நிற்க ஆந்திராவினால் முடிகிறது. ஆனால் உலகம் முழுக்க ஐ.டி. துறையின் மூளையாக இருப்பது தமிழனின் மூளைதான். அந்த மூளை சம்பளத்துக்குத்தான் வேலை செய்வேன் என்கிறதே ஒழிய, சுயமாகத் தொழில் தொடங்க மறுக்கிறது.என்ன காரணம்? நல்ல கல்வியறிவு, வளம், கலாசாரம் என அவர்களிடம் இல்லாத பல விஷயங்கள் நம்மிடம் இருந்தும், அவர்களிடம் இருக்கும் முக்கியமான விஷயமொன்று நம்மிடம் இல்லை - அதுதான் துணிச்சல். அதாவது, 'ரிஸ்க்' எடுக்கும் திறன்தான் நம்மிடம் குறைவாக உள்ளது. நம்மில் பலர் 'ரிஸ்க்' என்கிற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் பின்வாங்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஏன் இந்தத் தயக்கம்? எதில்தான் இல்லை 'ரிஸ்க்'? வாகனம் ஓட்டும்போது, பயணம் செய்யும்போது... எல்லாவற்றிலும் 'ரிஸ்க்' இல்லாமல் இல்லை. இதற்காக நாம் வண்டி ஓட்டாமல் இருக்கிறோமா, இல்லை விமானத்தில்தான் பறக்காமல் இருக்கிறோமா? நல்ல வாகனத்தை, நல்ல சாலையைத் தேர்வு செய்து ஜாக்கிரதையாக பயணம் செய்கிற மாதிரி, தொழிலைத் தொடங்கி நடத்தும்போதும் ஒரு பாதுகாப்பான அணுகுமுறையை வளர்த்துக் கொள்ளலாமே!இப்படி ஒரு அணுகுமுறை நமக்குள் ஏற்படாததற்கு என்ன காரணம்? நம் பெற்றோர்கள்தான்.

ஒரு தமிழ்த்தாய் தன் குழந்தையை கீழே விழ அனுமதிக்கமாட்டாள். தப்பித் தவறி குழந்தை விழுந்தால் போதும், அலறி அடித்துக்கொண்டு ஓடிப் போய் குழந்தையைத் தூக்குவாள். அவள் ஓடி வருவதைப் பார்த்து அழ நினைக்காத குழந்தைகூட அழ ஆரம்பித்துவிடும். அந்தச் சிறுவயது முதலே 'ரிஸ்க்' எடுக்கும் திறனை நாம் குறைத்துவிடுகிறோம். நம்மில் பாதிப் பேருக்கு மேல் நீச்சல் தெரியாது. தண்ணீர் என்றாலே நமக்கு அலர்ஜி. ஆனால் ஜப்பானில் மூன்றே மாதக் குழந்தையை தண்ணீரில் மிதக்கவிடுகிறார்கள். அந்தக் குழந்தை தவழ்வதற்கு முன்பே மிதக்கக் கற்றுக் கொள்கிறது. நடப்பதற்கு முன்பு நீந்தக் கற்றுக் கொள்கிறது. டன் கணக்கில் எடை கொண்ட யானையே நீச்சல் அடிக்கும்போது மனிதன் நினைத்தால் முடியாதா என்ன? ஆனால், நம்மால் நீந்தமுடியாது என்கிற எண்ணம் நம் மனதில் ஆழமாக விழுந்துவிட்டது. எனவேதான் நம் குழந்தைகளை தண்ணீர் பக்கமே நாம் அனுமதிப்பதில்லை.

குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பிறகாவது அவர்களை ஒரு முடிவெடுக்க அனுமதிக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. 17 வயதான மகன் அல்லது மகள் என்ன படிக்கவேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்கிறோம். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் நல்ல வழிகாட்டியாக, நல்ல முன்னோடியாக, நல்ல நண்பர்களாக இருந்தாலே போதும்; அவர்களுக்காக நீங்கள் முடிவு செய்யத் தேவையில்லை. அவன் குழந்தை, அவனுக்கு என்ன தெரியும் என்று அவர்களுக்காக நீங்கள் முடிவெடுக்க ஆரம்பித்தீர்கள் என்றால் பின்நாட்களில் அவர்களால் எந்தப் பிரச்னையிலும் சுயமாக சிந்தித்து முடிவு எடுக்க முடியாது.கோபி பிரயன்ட் (Kobe Bryant) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த கூடைப் பந்து வீரர். அவருக்கு 17 வயது ஆனபோது கல்லூரிக்குச் செல்வதா தேசிய கூடைப்பந்து சங்கத்தின் குழுவில் சேர்ந்து விளையாடுவதா என்கிற குழப்பம் வந்தது. என்ன முடிவெடுப்பது என்று தன் அப்பாவிடம் கேட்டார் கோபி. 'நீயே முடிவெடு' என்றுதான் அவர் சொன்னாரே ஒழிய, கோபிக்காக அவர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. கல்லூரிப் படிப்பு வேண்டாம்; கூடைப்பந்துதான் வேண்டும் என்று கோபி சுயமாக யோசித்து முடிவெடுத்ததால் முழுமையாக தன்னை அதில் ஈடுபடுத்திக் கொள்ள முடிந்தது. இன்று உலகில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவுக்கு அந்த விளையாட்டில் முன்னணி வீரராக இருக்கும் அவரது சம்பளம் ஆண்டுக்கு ரூ 100 கோடிக்கு மேல்!

'ரிஸ்க்'கைக் கண்டு நாம் தொடை நடுங்க என்ன காரணம்? நாம் தோல்வி அடைந்துவிடுவோமோ என்கிற பயம்தான். எல்லா விஷயத்திலும் எப்போதும் நாம் வெற்றியை மட்டுமே விரும்புகிறோம். தோல்வி வந்தால் அதை ஏற்றுக் கொண்டு கடந்து செல்லும் மனப்பக்குவம் நம் மக்களிடம் இல்லை. தோல்விக்காக குலுங்கிக் குலுங்கி அழுகிறவர்கள் உலகத்திலேயே நம்மவர்களாகத்தான் இருப்பார்கள். ஒரு தொழிலை ஆரம்பித்து நடத்தும்போது தோல்வி வந்தால் அதை எவ்வாறு சமாளிப்பது என்கிற முன்யோசனை இருந்தாலே போதும், எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அதிலிருந்து வெளியே வந்துவிடலாம்.

''நாங்கள் மிடில் கிளாஸ். என் அப்பா பெரிசா சம்பாதிக்கலை. நான் எப்படித் தொழில் தொடங்க முடியும்?'' என்று என்னிடம் கேட்ட இளைஞர்கள் பலர். தங்களின் தயக்கத்தில் பெரிய நியாயம் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தியும் அவரின் நண்பர்களும் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்கிற உண்மை அவர்களுக்குத் தெரியாது! தவிர, இந்தியாவிலும் சரி, உலகளவிலும் சரி, இன்று முன்னணியில் நிற்கும் பல தொழிலதிபர்கள் முதல் தலைமுறையினரே! அவர்களின் அப்பாக்கள் நம் அப்பாக்கள் மாதிரி மிடில் கிளாஸ்தான்! அவர்களால் மட்டும் எப்படி ஒரு தொழிலதிபராக மாற முடிந்தது? தொழில் தொடங்க பணம் தேவை! ஆனால், அது மட்டுமே தேவை என்று நீங்கள் நினைத்தால் தவறு. பணமிருந்தால் பெரிய தொழிலதிபராக ஆகிவிடலாம் என்பது உண்மையாக இருந்தால் இன்று பணக்காரர்கள் எல்லோருமே உலக அளவில் பெரும் தொழிலதிபர்களாக இருப்பார்கள்.

ஆனால், சாதாரண குடும்பத்தில் பிறந்த அம்பானியால்தான் மிகப் பெரிய பிஸினஸ் சாம்ராஜ்யத்தைக் கட்ட முடிந்தது. காரணம், அவரிடம் இருந்த துணிச்சல். அதாவது, ரிஸ்க் எடுக்கும் திறன்.நீங்கள் சொந்தமாக ஒரு தொழில் தொடங்கப் போகிறீர்கள் எனில் உங்கள் பெற்றோர்களிடம் இருந்து பணத்தைப் பெறாதீர்கள். அவர்கள் உங்களை 'ரிஸ்க்' எடுக்கவிடாமல் தடுத்துவிடுவார்கள். அதற்கு பதில், உங்கள் மீதும் உங்கள் ஐடியாவின் மீதும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், அதை ஒரு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனத்திடம் எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் கான்செப்டை விற்பனை செய்யுங்கள். அவர்களை பங்குதாரர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள். உங்கள் 'ரிஸ்க்'கை பரவலாக்கிக் கொள்ளுங்கள்; எதிர்காலத்தில் வெற்றிகரமான தொழிலதிபராக வருவீர்கள்.''ரிஸ்க்' எடுக்கிறது எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி' - வடிவேலுவின் ஜோக்கை கேட்டுவிட்டு நாம் சிரித்து விட்டுப் போவதைவிட, உண்மையிலேயே 'ரிஸ்க்'கை காதலிக்க ஆரம்பிப்போம். புதிய தொழில்முனைவர்களை உருவாக்குவோம். அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை தொழில் மாநிலமாக ஆக்கிக் காட்டுவோம்!